செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அச்சக ஊழியர் லாரி மோதி பலி

Published On 2019-03-14 09:56 GMT   |   Update On 2019-03-14 09:56 GMT
பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அச்சக ஊழியர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள பூரிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (70). ஓய்வு பெற்ற அரசு அச்சக ஊழியர். இவர், அருகிலுள்ள ஆத்துப்பாக்கம் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். தனது நண்பர் ஈஸ்வரனையும் உடன் அழைத்து சென்றார்.

நேற்று இரவு திருமண நிகழ்ச்சி முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினார்கள். பெரிய பாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் மோதியது. இதில் தெய்வ சிகாமணியும், ஈஸ்வரனும் கீழே விழுந்தனர்.

அப்போது, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி ரோட்டில் விழுந்து கிடந்தவர்கள் மீது மோதியது. இதில் தெய்வசிகாமணி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

படுகாயம் அடைந்த ஈஸ்வரன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார். மரணமடைந்த தெய்வசிகாமணிக்கு மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

Tags:    

Similar News