செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக பசுபதிபாளையம் ரெயில்வே கேட் மூடல் - பொதுமக்கள் அவதி

Published On 2019-02-24 17:56 GMT   |   Update On 2019-02-24 17:56 GMT
பராமரிப்பு பணி காரணமாக பசுபதிபாளையம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கரூர்:

கரூர் அருகேயுள்ள பசுபதிபாளையம் பகுதியில் திருச்சி சாலையை ஒட்டியபடி ரெயில்வே கேட் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் திருச்சி சாலைக்கு வந்து கரூருக்கு செல்ல முடியும். அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் அவர்கள் போக்குவரத்தினை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதன் காரணமாக ரெயில்வே கேட் அருகே, குகைவழிப்பாதை அமைத்துதர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் ரூ.6½ கோடி மதிப்பீட்டில் குகைவழிப்பாதை அமைக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. அதன் வழியாக பொதுமக்கள் தற்போது தொடர்ச்சியாக போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திடீரென அங்குள்ள ரெயில்வே கேட், பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனினும் ரெயில்வே கேட்டில் கேட் கீப்பர் பணியில் உள்ளார். எனவே பரா மரிப்பு பணியை விரைந்து முடித்து இந்த ரெயில்வே கேட் வழியாக வாகனங்கள் செல்லும் வகையில் அதனை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் குகைவழிப்பாதை, ரெயில்வே கேட் ஆகியவை அருகருகே இருக்கின்றன. அதனை ஒட்டியவாறே திருச்சி ரோட்டில் வளைவு பகுதி உள்ளது. எனவே அப்பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாரை பணியமர்த்தி விபத்து தடுப்பு நடவடிக்கையை முன்எச்சரிக்கையாக கையாள வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 
Tags:    

Similar News