செய்திகள்

தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிறது

Published On 2019-01-20 07:33 GMT   |   Update On 2019-01-20 07:33 GMT
தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என வானிமை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல், இந்திய பெருங்கடல் பகுதி வரை வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி பரவி உள்ளது.

இதன் காரணமாக இந்திய பெருங்கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடிக்கும். கடலோர பகுதி தவிர உள் மாவட்டங்களில் மூடுபனி நிலவும். நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதியில் உறைபனியும் நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அடுத்த 2 நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகப்பட்சம் 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News