செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி - கைதான 2 பேர் கோவை சிறையில் அடைப்பு

Published On 2019-01-10 11:48 GMT   |   Update On 2019-01-10 11:48 GMT
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான 2 பேரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். பனியன் தொழிலாளி.

இவர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி இருந்ததாவது-

திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை அடுத்துள்ள வாவிவாளையத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (52). இவர் அரசு வேலை வாங்கி தருவதாக திருப்பூர் சோளிபாளையம் பகுதியில் வைத்து என்னிடம் கடந்த ஜூன் மாதத்தில் ரூ. 8 லட்சம் பெற்றார்.

ஆனால் அரசு வேலை வாங்கி தரவில்லை. மேலும் பணத்தை திருப்பி தராமலும் காலம் தாழ்த்தி வந்தார்.இது குறித்து ராஜேஸ்வரனிடம் நேரில் சென்று கேட்ட போது மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சாய் அருண் (48), கார்த்திகேயன் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர்களுக்கு தலைமை செயலாளர் மிகவும் பழக்கம் என்றும் என்னிடம் தெரிவித்தனர்.

ஆனால் இருவரும் பணத்தை பெற்றுக் கொண்டு என்னிடம் மோசடி செய்து விட்டனர். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

புகார் தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ராஜேஸ்வரன், சாய் அருண், கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் லட்சக் கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவர்கள் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் ராஜேஸ்வரன், சாய் அருண் ஆகியோரை கைது செய்தனர். கார்த்திகேயன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
Tags:    

Similar News