செய்திகள்

மேகதாது விவகாரம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை இன்று சந்திக்கிறார்

Published On 2018-12-07 03:27 GMT   |   Update On 2018-12-07 03:27 GMT
கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் நரேந்திரமோடியை இன்று மாலையில் சந்தித்து பேசுகிறார். #MekedatuDam #Governor #Modi
சென்னை:

கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் வழங்கியது. அந்த ஆணையம் அதை ஏற்றுக்கொண்டு, விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று, கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளக்குழுமம் வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் கொடி நாள் நிகழ்ச்சிகளை கவர்னர் மாளிகையில் முடித்து விட்டு, மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் டெல்லி செல்கிறார். மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.



இந்த சந்திப்பின்போது, மேகதாது அணை பிரச்சினையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமரிடம், அவர் விளக்குகிறார். இந்த சந்திப்பை முடித்து விட்டு இரவே விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

டெல்லி செல்லும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன் அவரது கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபாலும் உடன் செல்கிறார்.  #MekedatuDam #Governor #Modi
Tags:    

Similar News