செய்திகள்

டிசம்பர் 4-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம்: அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு

Published On 2018-11-25 09:20 GMT   |   Update On 2018-11-25 09:20 GMT
பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என் அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. #JACTTOGEO
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க கீழ்ப்பாக்கத்தில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு இன்று நடைபெற்றது.

இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பென்சன் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளை சட்டசபையில் நிறைவேற்றுவதாக அறிவித்த பிறகும் இன்னும் செயல்படுத்தாமல் உள்ளதை சுட்டிக்காட்டி பேசினார்கள்.

அதன்பிறகு கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு அரசிடம் போராடி வருகிறோம். ஊதிய முரண்பாடு, பென்சன், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாததால் மீண்டும் டிசம்பர் 4-ந்தேதி முதல் ஜாக்டோ ஜியோ சார்பில் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக சட்டசபையில் வாக்குறுதி அளித்திருந்தனர். அந்த வாக்குறுதியை கூட இன்னும் நிறைவேற்றாமல் உள்ளனர். அதனால்தான் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்கள் போராட்டத்தில் 106 சங்கங்கள் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளன.

புயலால் பாதித்த நாகை, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்படும். அந்த மாவட்டங்களில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கஜா புயல் நிவாரண பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமவேலை, சம ஊதியம் வழங்காவிட்டால் டிசம்பர் 23-ந்தேதி முதல் குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News