செய்திகள்

ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த 41 கடைகளுக்கு சீல்

Published On 2018-11-21 18:22 GMT   |   Update On 2018-11-21 18:22 GMT
ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த 41 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் ‘சீல்‘ வைத்தனர்.
ராசிபுரம்:

ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமாக 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஏலத்தில் வாடகைக்கு எடுத்தவர்கள் டீ கடைகள், பேன்சி ஸ்டோர், சலூன் கடைகள் உள்பட பல்வேறு கடைகளை வைத்து நடத்தி வந்தனர். இந்த கடைகள் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் சேதமடைந்து மேல்தளம் பெயர்ந்து கீழே விழுந்தது. மேலும் மழைநீர் கட்டிடத்தின் மேல்தளத்தில் தேங்கியதால் கடைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபற்றி நகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையொட்டி நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறையினர் கடைகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் கடைகள் பயன்பாட்டிற்கு உகந்த நிலையில் இல்லை என்பது தெரியவந்தது. இதையொட்டி சேதமடைந்த கடைகளை ஏலத்தில் எடுத்தவர்களுக்கு கடைகளை காலி செய்யும்படி நகராட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இதையொட்டி நேற்று நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த 41 கடைகளுக்கு ‘சீல்‘ வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கட்டிடங்களுக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும், அதற்கான பூமி பூஜை நடைபெறும் என்று நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி தெரிவித்தார்.
Tags:    

Similar News