செய்திகள்

தாராபுரம் அருகே வீட்டு மனை வரையறைக்கு மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்

Published On 2018-10-13 11:03 GMT   |   Update On 2018-10-13 11:03 GMT
தாராபுரம் அருகே வீட்டு மனை வரையறைக்கு மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராபுரம்:

தாராபுரம் - உடுலை சாலையில் அனுமதியற்ற வீட்டு மனைகளுக்கு வீட்டு மனை வரையறை படுத்தும் முகாம் நடைபெற்றது.

இதில் சேலம் மண்டல இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.

தாராபுரம் நகராட்சி மற்றும் குண்டடம், கொளத்துப்பாளையம், சின்னக்கா பாளையம், ருத்ராபதி, மூலனூர் ஆகிய பேரூராட்சிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 200 பேர் மனு அளித்தனர்.

மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 1,200 மனுக்களுக்கு மனை அனுமதி வழங்கப்பட்டது.

இந்த முகாமில் கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த நாகராஜன் (49) மனு அளிக்க வந்தார். அவர் தாராபுரத்தில் உள்ள தனது வீட்டு மனைக்கு அனுதிக்காக வந்து இருந்தார்.

மனு அளிக்க வந்தவர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். நாகராஜனும் அவர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தாராபுரம் விரைந்து வந்தனர். நாகராஜன் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது தொடர்பாக தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News