செய்திகள்

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2018-09-25 07:22 GMT   |   Update On 2018-09-25 07:22 GMT
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். #Fishermen #SriLankaNavy
ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும் போது எல்லை தாண்டி வருவதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடிப்பதும், பல நேரங்களில் தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியைச் சோந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இங்கு மீன்பிடிக்கக்கூடாது எனக் கூறி மீனவர்களை எச்சரித்தனர்.

தொடர்ந்து மீனவர்களின் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் அறுத்து எறிந்து சேதப்படுத்தினர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை அள்ளி கடலில் வீசினர்

மேலும் சில மீனவர்களை தாக்கி அங்கிருந்து செல்லுமாறு விரட்டி அடித்ததாக தெரிகிறது. இதனால் உயிருக்கு பயந்த மற்ற மீனவர்கள் பாதியிலேயே மீன்பிடிப்பதை கைவிட்டு விட்டு கரை திரும்பினர்.

அப்போது அடைக்கலம் என்பவரு விசைப்படகின் மீது இலங்கை ரோந்து கப்பல் மோதியது. இதில் படகு சேதம் அடைந்தது.


இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ஏற்கனவே டீசல் விலை உயர்வால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி டீசல் போட்டுக் கொண்டு கடலுக்கு சென்றாலும் இலங்கை கடற்படையினரின் தொந்தரவு நீடித்து வருவதால் எங்களால் மீன்பிடி தொழிலை செய்ய முடியவில்லை.

இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் எங்களை தாக்கி விரட்டியடித்ததோடு பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர். #Fishermen #SriLankaNavy
Tags:    

Similar News