செய்திகள்

ராமநாதபுரத்தில் மணல் கடத்தும் கும்பலிடம் இன்ஸ்பெக்டர் பேரம் - வாட்ஸ் அப் ஆடியோவால் பரபரப்பு

Published On 2018-09-24 05:15 GMT   |   Update On 2018-09-24 05:15 GMT
மணல் கடத்தல் கும்பலிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணம் கேட்டு, பேரம் பேசும் ஆடியோ வாட்ஸ்- அப்பில் வைரலாக பரவுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Sandrobbery

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகாவுக்குட்பட்ட தத்தங்குடி கண்மாயில் குடிமராமத்து என்ற பெயரில் பல இடங்களில் மிக ஆழமாக தோண்டி பொக்லைன் எந்திரம் மூலம் மணல் கொள்ளையடிக்கப்பட்டதாக பரமக்குடி சப்- கலெக்டர் விஷ்ணுசந்திரனுக்கு பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது.

இதையடுத்து பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் கண்ணன், சிக்கல் வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் ஆகியோர் மீது குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு சப்-கலெக்டர் நோட்டீசு அனுப்பினார்.

தொடர்ந்து கனிம வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மணல் கொள்ளையை உறுதி செய்து அறிக்கை சமர்ப்பித்தனர்.

சப்-கலெக்டர் மேற் கொண்ட ஆய்விலும் பல இடங்களில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டது தெரியவந்தது.

 


இந்த நிலையில் சிக்கல் இன்ஸ்பெக்டர் முகமது நசீர், தத்தங்குடி கண்மாயில் மணல் அள்ளும் கடத்தல் கும்பலுடன் பேரம் பேசும் உரையாடல் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.

அந்த உரையாடலில் அந்தப்பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் மணல் கடத்தல் புரோக்கராக செயல்பட்டதும் அவரிடம் இன்ஸ்பெக்டர் முகமது நசீர் ரூ.20 ஆயிரம் கேட்டு பேரம் பேசுவது போன்ற தகவல்களும் வெளியாகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவிடம் கேட்டபோது, மணல் கொள்ளை கும்பலுடன், சிக்கல் இன்ஸ்பெக்டர் முகம்மது நசீர் பேரம் பேசியது குறித்து விசாரணை நடத்துமாறு கீழக்கரை டி.எஸ்.பி. (பொறுப்பு) நடராஜனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த ஆடியோவின் உண்மைத்தன்மை தெரிந்த பின்னர் இது தொடர்பாக துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #Sandrobbery

Tags:    

Similar News