செய்திகள்

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்

Published On 2018-09-17 08:05 GMT   |   Update On 2018-09-17 08:05 GMT
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRain #WeatherCentre
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

மத்திய வங்க கடல் பகுதியில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

இவற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும். தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


சென்னையில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவர்களுக்கு 3 நாட்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 17, 18, 19 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மத்திய வங்க கடல் பகுதிக்கும் ஆந்திர கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த 12 மணி நேரத்தில் தஞ்சையில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி முதல் பெய்த மழை அளவை கணக்கிட்டால் குறைவான மழையே பெய்துள்ளது.

வழக்கமாக இந்த சீசனில் 262 மி.மீ. மழை பெய்யும். ஆனால் 229 மி.மீ. மழை தான் பெய்துள்ளது. 13 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.  #TNRain #WeatherCentre
Tags:    

Similar News