செய்திகள்
புரோக்கர் செந்தில்குமார்

மோட்டார் வாகன ஆய்வாளரின் புரோக்கர் வீட்டில் சோதனை- 100 பவுன் தங்க நகைகள் சிக்கியது

Published On 2018-09-12 08:02 GMT   |   Update On 2018-09-12 08:02 GMT
லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் புரோக்கர் வீட்டில் நடந்த சோதனையில் 100 பவுன் நகைகள் மற்றும் 15 வங்கி கணக்குகள், சொத்து ஆவணங்கள் சிக்கியது. #RTO #DVACRaid
சேலம்:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு, முத்துக்குமார் என்பவரிடம் 4 சக்கர வாகனத்திற்கு தகுதி சான்று வழங்க ரூ.25ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.

இவருக்கு உடந்தையாக செயல்பட்ட சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த புரோக்கர் செந்தில்குமார் (வயது 44) என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர் ஜோதிடம் பார்ப்பதோடு பாபுவுக்கு புரோக்கராகவும், பினாமியாகவும் இருந்து வந்தார்.

கைதான செந்தில் குமாருக்கு ஆத்தூர் கோட்டை எல்.ஆர்.சி. நகரில் பங்களா உள்ளது. இந்த பங்களா சுமார் 1கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீட்டின் கிரஹபிரவேசம் இன்று நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் செந்தில் குமார் கைதானதைத் தொடர்ந்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி.சந்திரமவுலி தலைமையிலான போலீசார் நேற்று மாலை ஆத்தூரில் உள்ள செந்தில்குமாரின் புது பங்களா, வணிக வளாகம், ஜோதிட நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.


சுமார் 8 மணிநேரம் நடந்த இந்த சோதனையில் 100 பவுன் நகைகள் மற்றும் 15 வங்கி கணக்குகள், சொத்து ஆவணங்கள் சிக்கியது. மேலும் வங்கியில் ரூ.3 கோடி வரை அவர் பல்வேறு வகையில் டெபாசிட் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைதான செந்தில் குமாரின் குடும்பம் மிகவும் ஏழ்மையானதாகும். ஜோதிடம் பார்த்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயில்தான் குடும்பத்தை நடத்தி வந்தார். இவரிடம் பல அரசியல் கட்சி பிரமுகர்களும் ஜோதிடம் பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செந்தில்குமாருக்கு பாபுவுடன் தொடர்பு ஏற்பட்டது.

அதன்பிறகு அவர் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியாக மாறினார். ஆத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். மேலும் ஏராளமான டேங்கர் லாரிகளும் ஓடுகின்றன. சொந்தமாக வணிக வளாகங்களும் உள்ளன.

கடந்த 2006-ம் ஆண்டு அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பாபு மற்றும் செந்தில்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது பாபு மற்றும் அவரது மனைவி மங்கையர்க்கரசி பெயர்களில் தஞ்சாவூர், நாகப்பட்டிணம், சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகும் லஞ்சம் வாங்குவதை நிறுத்தாத பாபு, புரோக்கர் செந்தில்குமார் உதவியுடன் மீண்டும் சொத்து சேர்த்துள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது.

கைதான செந்தில்குமார் வீட்டில் இருந்து நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது தொடர்பாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #RTO #DVACRaid
Tags:    

Similar News