செய்திகள்

திருப்பூரில் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளிப்பு

Published On 2018-09-10 11:27 GMT   |   Update On 2018-09-10 11:27 GMT
திருப்பூர் மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் வேலை பறிபோனதால் எங்கு செல்வது என தெரியாமல் திடீரென நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர், செப். 10-

திருவாரூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் அருள்பிரகாஷ்(18). பெற்றோர், உறவினர்கள் யாரும் இல்லாததால் இவர் வேலை தேடி திருப்பூர் வந்தார்.

பின்னர் திருப்பூரில் உள்ள பாஸ்கர் என்பவரது ஓட்டலில் சப்ளைராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு தங்கும் இடத்தையும் பாஸ்கரே செய்து கொடுத்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தான் வேலைபார்க்கும் ஓட்டலில் இருந்து அருள்பிரகாஷ் பணத்தை திருடி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் அருள்பிரகாசை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்.

இதனால் ஆதரவின்றி தவித்த அருள்பிரகாஷ் எங்கு செல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வந்தார். இன்று காலை 11.30 மணியளவில் அருள்பிரகாஷ் 2 லிட்டர் பெட்ரோலை ஒரு கேனில் வாங்கிக்கொண்டு திருப்பூர் குமார் நகர் ஆட்டோ ஸ்டேண்டு பகுதிக்கு வந்தார். பின்னர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

தீ வேகமாக எரிய ஆரம்பித்ததும் வலி தாங்க முடியாத அவர் நடுரோட்டில் அங்கும், இங்கும் ஓடினார். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அருள்பிரகாஷ் உடலில் எரிந்த தீயை அணைத்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து தெரியவந்ததும் 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News