செய்திகள்

ஊட்டியில் ஊருக்குள் புகுந்த காட்டெருமை விரட்டியடிப்பு

Published On 2018-09-04 13:33 GMT   |   Update On 2018-09-04 13:33 GMT
ஊட்டியில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்திருந்த காட்டெருமை வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வழிமாறி வந்த காட்டெருமை தாவரவியல் பூங்காவில் புகுந்து அவ்வப்போது சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வந்தது.

இந்த நிலையில் நேற்று ஊட்டி கமர்ஷியல் சாலை பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்த பகுதியில் காட்டெருமை உலா வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

பின்னர் இந்த காட்டெருமை அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை வளாகத்திற்குள் புகுந்தது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காட்டெருமையை கண்காணித்தபடி இருந்தனர்.

இரவு 10 மணியளவில் டாஸ்மாக் கடை வளாகத்தில் இருந்து காட்டெருமை வெளியே வந்தது. அதனை பர்னல் பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு வனத்துறையினர் விரட்டி அடித்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

ஊருக்குள் புகுந்த காட்டெருமைக்கு சுமார் 20 வயது இருக்கும். அதனால் வேகமாக நடக்க முடியவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News