செய்திகள்

மீஞ்சூரில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை பொதுமக்கள் அவதி

Published On 2018-09-04 06:39 GMT   |   Update On 2018-09-04 06:39 GMT
மீஞ்சூரில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

பொன்னேரி:

மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன் வாயல் பகுதி 1-வது, 2-வது, 3-வது தெருக்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு கடந்த 6 மாதமாக குடிநீர் சரவர வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

மேலும் எப்போதாவது வரும் குடிநீரிலும் கழிவுநீர் கலந்து கருப்பு மற்றும் மஞ்சள் நிறமாக காணப்படுகிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அவர்கள் தவித்து வருகிறார்கள்.

இதையடுத்து டிராக்டர் மூலம் விற்கப்படும் தண்ணீரை மட்டுமே நம்பி உள்ளனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.6 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “குடிநீர் தட்டுப்பாடு குறித்து மீஞ்சூர் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கூடுதல் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதே போல் அப்பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பால் அங்கேயே தேங்கி கிடக்கிறது. இதனால் தெருக்கள் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்வதில்லை என்றும் பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Tags:    

Similar News