செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் 19 லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்

Published On 2018-09-01 11:36 GMT   |   Update On 2018-09-01 11:36 GMT
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. #DraftVoterList

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

இதில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டு கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 707 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 72 ஆயிரத்து 522 பெண் வாக்காளர்களும், இதர வகுப்பினர் 92 பேரும் உள்ளனர். மொத்தம் 19 லட்சத்து 12 ஆயிரத்து 322 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 10.1.2018 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 40 ஆயிரத்து 970, பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 74 ஆயிரத்து 786, 3-ம் பாலினத்தவர் 92 ஆக மொத்தம் 19 லட்சத்து 15 ஆயிரத்து 848 பேர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் 11.1.2018 முதல் 31.8.2018 வரை தகுதி அடிப்படையில் ஆண் வாக்காளர்கள் ஆயிரத்து 888 பேரும், பெண் வாக்காளர்கள் 2 ஆயிரத்து 146 பேரும், 3-ம் பாலினத்தவர் 2 பேரும் சேர்த்து 4 ஆயிரத்து 36 வாக்காளர்கள் புதிதாக இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அது போன்று 11.1.2018 முதல் 31.8.2018 வரை விசாரணை அடிப்படையில் இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 3 ஆயிரத்து 151 பேரும், பெண் வாக்காளர்கள் 4 ஆயிரத்து 410 பேரும், 3-ம் பாலினத்தவர் ஒருவரும் சேர்த்து மொத்தம் 7 ஆயிரத்து 562 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் பார்வைக்காக இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை வைக்கப்பட்டிருக்கும். இதற்காக ஆயிரத்து 147 அலுவலர்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் 1.1.2019 அன்று 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று படிவம் எண் 6-ஐ பூர்த்தி செய்து வயது மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவண நகல்களை இணைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் அளிக்கலாம்.

மேலும் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6-ஐயும், பெயர் நீக்கம் செய்திட படிவம் 7-ஐயும், பெயர், முகவரியில் ஏதேனும் திருத்தங்கள் செய்திட படிவம் 8-ஐயும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8 ஏ -ஐயும் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வாக்குச் சாவடி மைய அலுவலரிடம் அளிக்கலாம்.

வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் வருகிற 9-ந்தேதி, 23-ந்தேதி, 7-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் வருகிற 4.1.2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டு அவர் பேசும் போது கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் 12 லட்சத்து 49 ஆயிரத்து 537 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 557 பேர் ஆண்கள்.. 6 லட்சத்து 30 ஆயிரத்து 951 பேர் பெண்கள். இதர வகுப்பினர் 29 பேர் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். #DraftVoterList

Tags:    

Similar News