செய்திகள்

போச்சம்பள்ளி அருகே பிரபல கொள்ளையன் குண்டாசில் கைது

Published On 2018-08-28 04:48 GMT   |   Update On 2018-08-28 04:48 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். #arrest

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் வழிப்பறி கொள்ளையும், வீடு புகுந்து நகை திருடி சென்ற சம்பவம் நடந்த வண்ணம் இருந்தது.

போச்சம்பள்ளி அருகே கன்னந்தூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் கார்த்திகேயன் (எ) கார்த்தி (வயது22). இவர் முள்ளம்பட்டி பகுதியில் பஸ்சுக்காக காந்திருந்த வாலிபர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து தப்பி ஓட முயன்றார்.

உடனே அக்கம் பக்கத்தினர் கார்த்திகேயனை சுற்றி வளைத்து பிடித்து பாரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் கார்த்திக்கேயன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் கார்த்திகேயன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாதமங்கலம் கிராமத்தில் ராதாகிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகளை திருடியது தெரியவந்தது. இதே போல் மேல்சாமாண்டபட்டியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வீட்டில் 10 பவுன் நகை திருடியது தெரியவந்தது.

இதே போன்று இவர் பல்வேறு இடங்களில் வீட்டின் கதவை உடைத்து நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்தும், ரோட்டில் தனியாக செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் கார்த்திக்கேயன் வீட்டில் சோதனை நடத்தியதில் கோழிகள் அடைத்து வைத்திருக்கும் கூண்டில் 17 பவுன் நகைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான கார்த்திகேயனை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவின் பேரில் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் பேரிலும் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட கார்த்திகேயன் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்திகேயனிடம் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நகலை ஒப்படைத்னர்.

Tags:    

Similar News