செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2018-08-27 03:22 GMT   |   Update On 2018-08-27 03:22 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மேட்டூர்:

கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் குடகு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக முக்கிய அணைகள் நிரம்பின.

இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து தமிழகத்துக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று காலை வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதேபோல கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக வந்தது. நேற்று வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.

விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். மெயின் அருவி, சினிபால்சில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். பரிசல்கள் நேற்றும் தொடர்ந்து இயக்கப்பட்டன.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 20 ஆயிரத்து 742 கனஅடி வந்து கொண்டு இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 25 ஆயிரத்து 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 16 கண் பாலம் வழியாக 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உபரிநீர் வெளியேறுவதை பார்த்து ரசித்தனர். 
Tags:    

Similar News