செய்திகள்

நத்தம் அருகே ஊருக்குள் வர மறுக்கும் அரசு டவுன் பஸ்கள்

Published On 2018-08-13 11:13 GMT   |   Update On 2018-08-13 11:13 GMT
நத்தம் அருகே ஊருக்குள் அரசு டவுன் பஸ்கள் வர மறுப்பதால் கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

செந்துறை:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட களத்துப்பட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.இங்கு குடியிருப்புகள் அதிகரித்துவிட்ட நிலையில் அதற்கேற்ப போதிய குடிநீர்வசதி செய்யப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக முறையாக குடிநீர் வழங்கவில்லை.

இந்த கிராமத்தில் தெருவிளக்குகள் பராமரிப் பில்லாமல் இருட்டாக உள்ளது. இதனால் இரவு நேரங்களிலில் வீட்டிற்குள் வி‌ஷபாம்புகள் வந்து விடுவதால் தூங்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். கொசு தொல்லை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் குளிக்க குளியலறை,குளியல் தொட்டி என பிற ஊர்களில் கட்டியுள்ளனர். ஆனால் எங்கள் ஊரில் எந்த வசதியும் இல்லை. அதுபோல் மயான வசதி செய்துதரவில்லை, மயான கட்டிடம் கட்டிதர சொல்லி வருடக்கணக்கில் ஆகிறது. நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

எங்கள் ஊருக்குள் அரசு பஸ் காலையில் நத்தத்திலிருந்து குட்டுப்பட்டி, அரவங்குறிச்சி வழியாக களத்துப்பட்டிக்கு வந்து திருமலைக்கேணி போனது. அடுத்த பஸ் துவரங்குறிச்சியிலிருந்து எங்கள் ஊர் வழியாக தான் திண்டுக்கல்லுக்கு போனது. ஆனால் இப்போது எந்த ஒரு பஸ்சும் எங்கள் ஊருக்குள் வருவதில்லை.

காரணம் உங்கள் ஊருக்கு வர இயலாது ரோடுவசதி இல்லை என்று கூறுகின்றனர். பஸ் வசதி இல்லாத ஊர் இருக்கிறதா? என்றால் எங்க ஊர்தான். இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் வேலையாட்கள், அவசரத்துக்கு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டுமானால் வாடகைகார் அல்லது ஆட்டோ தான் வர வேண்டும்.அதுவும் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்தால் தான் வருவார்கள். இதனால் பணம்விரயம், நேரம்வீணாகிறது. கிராம மக்கள் அனைவரும் நடந்து தான் செல்லவேண்டும் என்பது எங்கள் விதி.

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News