செய்திகள்

தஞ்சையில் குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர்கள்

Published On 2018-08-10 04:25 GMT   |   Update On 2018-08-10 04:25 GMT
தஞ்சையில் குடிபோதையில் போக்குவரத்து போலீஸ்காரரை வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை புது ஆற்று பாலம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் நேற்று இரவு 11 மணியளவில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக வந்தனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 3 வாலிபர்களும் குடிபோதையில் இருந்தனர்.

பின்னர் அவர்களிடம் போக்குவரத்து போலீஸ்காரர் ராஜா ‘ஒரே வண்டியில் 3 பேர் வர லாமா? மது குடித்து விட்டு வண்டி ஓட்டலாமா? என்று கேட்டார்.

இதனால் 3 வாலிபர்களும் ஆத்திரம் அடைந்தனர். அப்போது அவர்கள், போலீஸ்காரர் ராஜாவிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஆத்திரத்தில் திடீரென போலீஸ்காரர் ராஜாவின் சட்டையை பிடித்து தாக்கினர்.

நடுரோட்டில் போலீஸ்காரர் ஒருவரை வாலிபர்கள் தாக்கியதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த 3 வாலிபர்களையும் பிடிக்க அங்கிருந்த சிலர் ஓடி வந்தனர்.

இதை பார்த்த 3 வாலிபர்களும், அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் பொதுமக்கள் விடாமல் விரட்டி சென்று 3 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் தஞ்சை ஞானம் நகரை சேர்ந்த வீரமணி (24), தஞ்சை மானாம்புசாவடி மி‌ஷன் தெருவை சேர்ந்த சபேஷ் (22), மற்றும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே விருப்பாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

குடிபோதையில் போலீஸ் காரரை வாலிபர்கள் தாக்கிய சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News