செய்திகள்

திருப்பூரில் தூய்மை பாரத ரத ஊர்வலம் ஒரு மாதம் பயணிக்கிறது

Published On 2018-08-06 11:16 GMT   |   Update On 2018-08-06 11:16 GMT
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத ஊர்வல ரதத்தினை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத ரத ஊர்வலம், கணக்கெடுப்பு - ஊரகம் 2018 என்ற திட்டத்தினையும், இத்திட்டத்தின் சின்னம் மற்றும் கையேட்டினை கலெக்டர் பழனிசாமி வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமான தூய்மை கணக்கெடுப்பு - ஊரகம் 2018 தற்போதுள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அமைந்துள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் தரவரிசைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினை பெரிய அளவில் பிரபலப்படுத்தி அதன் மூலம் கிராமப் புறங்களில் மக்கள் பங்கேற்புடன் தூய்மை நிலை மேம்படுத்த இது ஒரு முனைப்பு இயக்கமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலம் 9-ந்தேதி காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திலும், 10-ந்தேதி வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்திலும், 11-ந்தேதி மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திலும், 12-ந்தேதி தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திலும், 13-ந்தேதி மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்திலும், 14-ந்தேதி மற்றும் 15-ந்தேதி உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திலும், 16-ந்தேதி அன்று குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திலும், 17-ந்தேதி குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திலும், 18-ந்தேதி பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திலும் மற்றும் 19-ந்தேதி பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திலும் தூய்மை பாரத ரதம் ஊராட்சி பகுதிகளுக்கு வருகை தரவுள்ளது.

இச்சேவையினை பொதுமக்கள் நல்ல முறையில் பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர், திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவித்திட்ட அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பல்துறை அலுவலர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த தூய்மை பாரத இயக்க ஊக்கு விப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News