செய்திகள்

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்து - மூலிகைச் செடிகள் நாசம்

Published On 2018-08-02 07:32 GMT   |   Update On 2018-08-02 07:32 GMT
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ எரிவதால் அரிய வகை மூலிகை செடிகளும், மரங்களும் தீயில் எரிந்து நாசமாகி வருகிறது.
விருதுநகர்:

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி வன சரகம் அய்யனார் கோவில், வாளைகுளம், ராஜாம்பாறை, அம்மன் கோவில், கோட்டைமலை, பிறாவடியார், நவலூத்து, தேவியாறு, சாஸ்தா கோயில் என 9 பீட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று மாலை நவலூத்து பீட் பகுதியில் திடீரென காட்டு தீ பற்றியது.

ஒரு பகுதியில் பற்றிய காட்டு தீ, வனப்பகுதியில் வீசிய பலமான காற்றால் மலையை சுற்றி உள்ள பகுதிகளிலும் முழுவதும் பரவியது.

மலையை சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ எரிவதால் அந்தப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த தீ விபத்தால் மலையில் உள்ள புல் வகைகள் மட்டுமல்லாமல், அரிய வகை மூலிகை செடிகளும், மரங்களும் தீயில் எரிந்து வருகிறது.

இரவு நேரத்தில் காற்று பலமாக வீசி வருவதால் மேலும் தீ வேகமாக பரவும் அபாயமான சூழல் உள்ளது. வன விலங்குகளும் இந்த விபத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தற்போது பரவி வரும் தீயை கட்டுப்படுத்த முதற்கட்டமாக தீ எரியும் பகுதியான நவலூத்து மற்றும் தேவியாறு பகுதிக்கு வனத்துறையினர் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் 22 பேர் கொண்ட குழுவினர் விரைந்துள்ளனர்.

மேலும் அருகில் உள்ள வனச்சரக காவலர்களை தீயை கட்டுப்படுத்தும் பணிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News