செய்திகள்

சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

Published On 2018-07-31 15:02 GMT   |   Update On 2018-07-31 15:02 GMT
சுதந்திர தினவிழாவை பெரம்பலூரில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.
பெரம்பலூர்:

சுதந்திர தினவிழாவை பெரம்பலூரில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசியதாவது:-

வருகிற 15-ந்தேதி அன்று சுதந்திர தினவிழா நடைபெறும். கூட்டத்தில் காவல் துறையினர் மூலம் காவல் துறை அணிவகுப்பு, ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு உள்ளிட்டவற்றை சிறப்பாக நடத்திட காவல்துறையினர் தகுந்த ஏற்பாடு செய்திட வேண்டும்.

விழா நடைபெறும் மேடை, தியாகிகள் அமரும் இடம், பயனாளிகள் அமரும் இடம் ஆகியவற்றிற்கு முறையான இடங்களில் சாமியானா பந்தல் அமைத்து இருக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் தங்கள் துறையின் மூலம் வழங்கப்படும் அரசின் நலத்திட்டங்கள் மூலமாக அதிகப்படியான பயனாளிகள் பயன்பெறும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்தல் உள்ளிட்ட பணிகளையும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல் பணிகளை சிறப்பாக செய்ய தகுந்த முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

விழா சிறப்பாகவும், அமைதியாகவும் நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர் களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News