செய்திகள்

லாரி ஸ்டிரைக் எதிரொலி - மினி வேன்களில் காய்கறிகளை அனுப்பும் வியாபாரிகள்

Published On 2018-07-22 12:01 GMT   |   Update On 2018-07-22 12:01 GMT
லாரி ஸ்டிரைக் எதிரொலியாக ஒட்டன் சத்திரத்தில் இருந்து மினி வேன்களில் காய்கறிகளை வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர். #LorryStrike

ஒட்டன்சத்திரம்:

தென் தமிழகத்தின் பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை இங்கு கொண்டு வருகின்றனர்.

இங்கிருந்து கோவை, கேரளா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து அனுப்பி வைக்கின்றனர். தினசரி 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் டன் கணக்கில் அனுப்பப்படுவது வழக்கம்.

டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக லாரி உரிமையாளர்கள் இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. நேற்று சனிக்கிழமை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இன்று காலை அதிக அளவு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வந்திருந்தனர்.

காய்கறிகள் அனுப்ப முடியாமல் தேக்கம் அடைய தொடங்கின. இதனைத் தொடர்ந்து வியாபாரிகள் மினி வேன்கள் மூலம் காய்கறிகளை அனுப்ப தொடங்கி உள்ளனர். லாரியை விட மினி வேன்களுக்கு வாடகை கூடுதலாக இருப்பதால் காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

ஆனால் மார்க்கெட்டில் காய்கறிகள் தேங்கி உள்ளதால் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்பட்டது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.150-க்கு விற்பனையானது. கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.10, பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50, சின்னவெங்காயம் ரூ.50 என்ற விலையில் விற்பனையானது.

இன்று இரவுக்குமேல்தான் லாரி ஸ்டிரைக் பாதிப்பு குறித்து முழு விவரம் தெரிய வரும். மினி வேன்களில் அனுப்புவதால் கூடுதல் வாடகை மற்றும் வேலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். #LorryStrike

Tags:    

Similar News