செய்திகள்

போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் எஸ்.வி.சேகர்- போலீஸ் அலட்சியத்தால் தொடரும் சர்ச்சை

Published On 2018-06-13 06:00 GMT   |   Update On 2018-06-13 06:00 GMT
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசிய எஸ்.வி.சேகர் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் நிகழ்வு தொடர்கதை ஆகியுள்ளது. போலீசாரின் அலட்சிய போக்கு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.#svesekar
சென்னை:

காமெடி நடிகரும், பா.ஜனதா பிரமுகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி பேஸ்புக் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இதனால் எஸ்.வி.சேகர் எந்தவித பயமும், பதட்டமும் இன்றி சர்வ சாதாரணமாக சுற்றி வருகிறார். இதற்கிடையே எஸ்.வி.சேகர் கோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியானது. இதனால் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதன் பிறகும் எஸ்.வி.சேகர் மீது கைது நடவடிக்கை பாயவில்லை.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து வருகிற 20-ந்தேதி அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எஸ்.வி.சேகர் பொது நிகழ்ச்சிகளில் பலத்த பாதுகாப்புடன் பங்கேற்பது தொடர் கதையாகியுள்ளது.

தாம்பரம் அருகே படப்பையில் உள்ள ஓட்டலுக்கு நேற்று மாலை எஸ்.வி. சேகர் சென்றார். அப்போது அவருடன் 2 போலீசார் பாதுகாப்புக்காக சென்றனர்.

எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாத விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டன குரல்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக 50 நாள் ஆவதாகவும் பதிவுகள் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீசாரின் அலட்சியமான நடவடிக்கைகள் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. #svesekar
Tags:    

Similar News