செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும்- கலெக்டர் பேட்டி

Published On 2018-05-24 16:07 GMT   |   Update On 2018-05-24 16:07 GMT
ஸ்டெர்லைட் ஆலையை முடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உறுதி அளித்துள்ளார். #ThoothukudiShooting #ThoothukudiCollector
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டு, அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி நகர பகுதியில் பேருந்துகளை தவிர்த்து மற்ற வாகனங்கள் இன்று இயங்க தொடங்கின. நகரில் ஆங்காங்கே மருத்துக்கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று வணிகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நகரில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், வழக்கம்போல் வணிக நிறுவனங்களை திறக்க வேண்டு என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 102 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் 34 பேர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இருசக்கர வாகனம் உட்பட மொத்தம் 98 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ29 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. 

ஸ்டெர்லைட் ஆலை நிச்சயமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை மீண்டும் செயல்படவாய்ப்பு இல்லை. அதுதான் அரசின் எண்ணம். 

தூத்துக்குடியில் அம்மா உணவகம் 24 மணி நேரமும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளை திறந்து வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

புறநகர்ப் பகுதிகளில் ஏற்கனவே பேருந்துகள் இயங்கத் தொடங்கிவிட்டன. நகரத்துக்கு உள்ளும் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இயல்பு நிலை திரும்ப பொதுமமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.  #ThoothukudiShooting #ThoothukudiCollector
Tags:    

Similar News