செய்திகள்

தொடர் புகார் எதிரொலி - திண்டுக்கல் மாவட்ட வன அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

Published On 2018-05-05 10:21 GMT   |   Update On 2018-05-05 10:21 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் புகாரில் சிக்கிய வன அதிகாரிகள் கூண்டோடு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மண்டல வனப்பாதுகாவலராக பணியாற்றி வந்த நாகநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட வனக்கோட்ட அலுவலராக பணியாற்றி வந்த வெங்கடேஷ் கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்துக்கு துணை வனப்பா துகாவலராக இருந்த வித்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

கொடைக்கானல் வன கோட்ட அலுவலராக இருந்த முருகன் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வனக் கோட்ட அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூரில் பணியாற்றி வந்த தேஜஸ்வி கொடைக் கானல் வன அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மண்டல வன பாதுகாவலர் கோட்ட வன அலுவலர்கள் என முக்கிய பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கொடைக்கானல் வனக்கோட்ட அலுவலர் முருகன் மீது கடந்த சில மாதங்களாகவே புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. மன்னவனூரில் சுற்றுலா பயணிகளை மிரட்டி தாக்கியது, கொடைக்கானல் டாக்சி டிரைவர்களை சுற்றுலா இடங்களுக்கு அனுமதிக்காதது போன்ற பிரச்சினைகளால் வனத்துறையினரை கண்டித்து போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இதே போல மற்ற அதிகாரிகள் மீதும் மறைமுகமாக புகார்கள் சென்றதின் அடிப்படையிலேயே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட வன அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள வித்யா பொறுப்பேற்றுக் கொண்டார். இதே போல் கொடைக்கானல் வனக்கோட்ட அலுவலராக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியுள்ள திருநாவுக்கரசு தற்போது மண்டல வனப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News