செய்திகள்
குளச்சலில் இன்று காலை கடல் அலை சீற்றமாக இருந்த காட்சி.

திடீர் கடல் சீற்றத்துக்கு காரணம் என்ன? தேசிய கடல்சார் ஆய்வு மைய விஞ்ஞானி தகவல்

Published On 2018-04-22 06:50 GMT   |   Update On 2018-04-22 06:50 GMT
அந்தமான் பகுதியில் உருவான கடல் அழுத்தமே திடீர் சீற்றத்துக்கு காரணம் என்று தேசிய கடல்சார் ஆய்வு மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார். #RoughWeather
நாகர்கோவில்:

தென்தமிழக கடல் பகுதியில் நேற்று முதல் 48 மணி நேரத்திற்கு கடல் சீற்றமாக காணப்படும் என்றும் கடலில் 10 அடி முதல் 30 அடி வரை உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பும் என்றும் ஐதராபாத்தில் உள்ள தேசிய கடல்சார் ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

அதன்படி தென் தமிழக கடல் பகுதியான குமரி மாவட்டம் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள கடல் நேற்று முதல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் எழும் ராட்சத அலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்கின்றன. குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக பல கடலோர கிராமங்களில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்து விட்டது. ஏராளமான படகுகளையும் கடலுக்குள் இழுத்து சென்றுவிட்டது.

இந்த கடல் சீற்றம் இதுவரை இல்லாத அளவுக்கு இருப்பதால் மீனவர்கள் மத்தியில் ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் கடல் சீற்றத்திற்கு காரணம் என்ன என்பதுபற்றி ஐதராபாத் தேசிய கடல்சார் ஆய்வு மைய திட்ட விஞ்ஞானி அனுராதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

குமரியில் இருந்து தென் பகுதியில் உள்ள அந்தமான் கடல் பகுதியில் திடீரென்று கடல் அழுத்தம் ஏற்பட்டது. இங்கு கடலின் மேல் பகுதியில் வீசும் காற்றின் வேகம் அதிகரித்ததால் இந்த கடல் அழுத்தம் உருவானது.

கடல் அழுத்தம் காரணமாக கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. இந்த அலைகள் குமரி கடல் பகுதியை நோக்கி செல்ல தொடங்கின. இதன் காரணமாகவே தென் தமிழக கடல் சீற்றம் நிலவுகிறது.

அடுத்த 24 மணிநேரத்தில் இந்த நிலை மாறும். கடல் அழுத்தமும் படிப்படியாக குறைந்துவிடும். அதன்பிறகு கடலில் சீற்றம் தனிந்து இயல்பான நிலைக்கு திரும்பி விடும். இன்று இரவுக்குள் கடல் சீற்றம் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.

வெப்ப சலனம் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதாக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தவறானது.

இவ்வாறு அவர் கூறினார்.


தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இன்று கூறியதாவது:-

கடலில் நடக்க கூடிய தட்ப வெப்ப மாற்றங்கள் காரணமாக கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக அதிக உயரத்துக்கு எழும்பும். 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் அளவுக்கு உயரும் என்று இந்திய கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இன்று நள்ளிரவு 11 மணி வரை இந்த கடல் சீற்றம் காணப்படும்.

கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நாங்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கடலோர கிராமங்களில் உஷார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

இன்று காலை குமரி மாவட்டத்தில் சீற்றம் சற்று குறைந்திருப்பதாக அங்குள்ள கலெக்டர் தெரிவித்தார். சீற்றம் காரணமாக நேற்று இரவு குமரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் மீட்கப்பட்டு அங்குள்ள பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடல் சீற்றத்தால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கலெக்டர் மற்றும் வருவாய் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதேசமயம் தமிழகத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Tags:    

Similar News