செய்திகள்

நாமகிரிபேட்டையில் அரசு டாக்டர் மர்ம மரணம்

Published On 2018-04-17 10:09 GMT   |   Update On 2018-04-17 10:09 GMT
நாமகிரிபேட்டையில் அரசு டாக்டர் பருத்தி காட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, நாமகிரி பேட்டை போலீஸ் சரகம், அரியாக்கவுண்டம்பட்டி அருகிலுள்ள குருவாலா குமரன் தோட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 45). டாக்டரான இவர் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் ராசிபுரம் வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி டாக்டர் ஜெயா (40). இவர் நாமகிரிபேட்டையில் தனியாக ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு சவுமியா(15), சோனாலி (12) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் டாக்டர் செந்தில்குமார் பணி முடிந்த நேரங்களில் நாமகிரிபேட்டையில் அவர் களது ஆஸ்பத்திரியில் (கிளினிக்) சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது வழக்கம். கணவன்-மனைவி இருவரும் டாக்டர் என்பதால் நாமகிரிபேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நோயாளிகள் பலர் சிகிச்சைக்காக வருவார்கள்.

கடந்த 13-ந்தேதி பிள்ளா நல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வழக்கம்போல் பணிக்கு சென்ற டாக்டர் செந்தில் குமார், அன்று மாலையில் நாமகிரிபேட்டையில் உள்ள தங்களது ஆஸ்பத்திரியில் இருந்து வழக்கம் போல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மாலை 6 மணியளவில் நாமகிரி பேட்டையில் உள்ள அவர்களது ஆஸ்பத்திரியில் இருந்து டி-சர்ட் மற்றும் சாக்ஸ் அணிந்த நிலையில் வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பலர் இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி ஜெயா நாமகிரிபேட்டை போலீசில், கணவரை காணவில்லை என்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், மாயமான செந்தில் குமாரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் செந்தில் குமார் நாமகிரிபேட்டையில் இருந்து புதுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பெருமாள் கோவில் அருகில் உள்ள பருத்தி காட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நாமகிரிபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் மர்மமான முறையில் இறந்திருப்பது தெரியவந்தது.

இது பற்றி தகவல் அறிந்த மனைவி ஜெயா மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் என நூற்றுக்கணக்கான பேர் அங்கு வந்து செந்தில் குமார் உடலை பார்த்து கதறி அழுதனர். டாக்டர் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் முழுமையாக தெரிய வரும். முதற்கட்டமாக நாமகிரிபேட்டை போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் ஒருவர் பருத்தி காட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News