செய்திகள்

என் சொந்த செலவில் ஜெயலலிதா சிலையை சீரமைத்து கொடுப்பேன் - ஆந்திர சிற்பி

Published On 2018-02-26 05:35 GMT   |   Update On 2018-02-26 09:03 GMT
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை எனது சொந்த செலவில் சீரமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளேன் என்று ஆந்திர மாநில சிற்பி பி.எஸ். வி.பிரசாத் கூறி உள்ளார்.
சென்னை:

முன்னாள்  முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்த சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்.



ஜெயலலிதாவின் சிலை அமைப்பு சரியாக அமையவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக ஜெயலலிதாவின் முகம் அவர் போன்று இல்லை என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக படங்களும், தகவல்களும் பரவி உள்ளன.

மேலும் சிலையின் ஜெயலலிதா உடல் சற்று பெரிதாக இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் அ.தி.மு.க. தரப்பிலேயே அதிருப்தி எழுந்துள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மாறுபட்ட தகவல்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த சிலையை செய்த ஆந்திரா மாநில சிற்பி பி.எஸ். வி.பிரசாத் சர்ச்சை காரணமாக வேதனை அடைந்துள்ளார். ஜெயலலிதா சிலையை சீரமைத்து கொடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டதாகும். 20 நாட்களுக்கு முன்புதான் எனக்கு இதற்கான ஆர்டர் தரப்பட்டது. களிமண்ணால் மாதிரி சிலை செய்யப்பட்டது. அதற்கு 3 நாட்கள் ஆனது.

களிமண் சிலை மாதிரியில் எந்த மாறுபாடும் தெரியவில்லை. இதையடுத்து வெண்கலத்தில் சிலை உருவாக்கப்பட்டது. இரவும் பகலுமாக பாடுபட்டு இந்த சிலை செய்யப்பட்டது.

குறுகிய காலம் என்பதால் சிலை வேகமாக தயாரிக்கப்பட்டது. சிலை தோற்றம் குறித்து சர்ச்சை எழுந்திருப்பது எனக்கு வேதனை தருகிறது. சமூக வலைதளங்களில் இது தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே ஜெயலலிதா சிலையை சீரமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளேன். எனது சொந்த செலவில் அந்த சீரமைப்பு பணியை செய்ய முடிவு செய்துள்ளேன்.

சிலை செய்து முடித்த போது அதை பல்வேறு கோணங்களில் படமாக எடுத்து அ.தி.மு.க. தலைவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர்கள் அதை பார்த்துவிட்டு ஒப்புதல் அளித்தனர். அதன் பிறகே சிலையை சென்னைக்கு கொண்டு வந்தேன்.

ஜெயலலிதா சிலையை உருவாக்க நானும், எனது சகோதரன் காமதேனு பிரசாத்தும் மற்றும் 20 ஊழியர்களும் அரும்பாடு பட்டோம். குறுகிய காலத்தில் செய்யப்பட்ட சிலை என்பதால் சிறு தவறு நேர்ந்திருக்கலாம். நாங்கள் செய்த தவறை நாங்களே சரி செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம்.

ஆனால் இதுவரை அ.தி.மு.க. தரப்பில் இருந்து யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. ஜெயலலிதா சிலையை எங்கள் செலவிலேயே சீரமைத்து வழங்குவோம்.

நாடெங்கும் பல்வேறு தலைவர்களுக்கு சிலை செய்து கொடுத்துள்ளோம். அதற்காக எங்களுக்கு விருது கூட வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் நாங்கள் தயாரித்த ஒரு பெரிய தலைவரின் சிலை சர்ச்சைக்குள்ளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதாவின் வெண்கல சிலை மொத்தம் சுமார் 350 கிலோ எடை கொண்டது. அதை மாற்ற அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதாவின் தற்போதைய சிலையில் சீரமைப்பு செய்யப்படுமா? அல்லது இந்த சிலைக்கு பதில் வேறு ஒரு புதிய சிலை செய்யப்படுமா? என்பது விரைவில் தெரிந்து விடும். #tamilnews

Tags:    

Similar News