செய்திகள்

ஒரே நாளில் ரூ.120 கோடி விநியோகம் - மதுசூதனனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: வெற்றிவேல் புகார்

Published On 2017-12-17 10:34 GMT   |   Update On 2017-12-17 10:34 GMT
அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், ஆர்.கே.நகரில் ரூ.120 கோடி வழங்கியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி விக்ரம்பத்ராவிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வாக்காளர்களுக்கு வழங்க பல கோடி ரூபாயை எடுத்து செல்ல போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அரசு வாகனங்களை அ.தி.மு.க. அரசு பயன்படுத்தி உள்ளது.

இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ.120 கோடி வழங்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே நான் புகார் தெரிவித்து இருக்கிறேன். எனவே எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து மதுசூதனனை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்த பிறகு வெற்றிவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க.வினர் நேற்று மட்டும் 120 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கி உள்ளனர். 80 சதவீதம் பேருக்கு பணம் வழங்கப்பட்டு விட்டது. அ.தி.மு.க.வினர் இரட்டை இலை சின்னம் இருந்தும் கூட தோல்வி பயத்தில்தான் பண விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர்கள் தங்களது துறை அலுவலகங்கள் மூலம் பணத்தை விநியோகித்துள்ளனர். இது ஒரு வெட்ககேடான செயலாகும்.

ஆர்.கே.நகரில் இரட்டை இலை வெற்றி பெறுவதற்காக அதிகாரிகளும், போலீசாரும் உடந்தையாக செயல்பட்டு வருகிறார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள போலீஸ் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். தேர்தலை ரத்து செய்ய கூடாது. நேர்மையாக, முறையாக தேர்தலை நடத்த வேண்டும். ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News