செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியது

Published On 2017-12-07 08:20 GMT   |   Update On 2017-12-07 08:20 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு வீடாக சென்று வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டது. தற்போது அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை யொட்டி தொகுதிக்குள் வரும் வெளி மாவட்ட வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

தொகுதிக்குள் வசிக்கும் பொதுமக்களின் வாகனங்களை எளிதில் கண்டறியும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வாகனங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. தற்போது கணக்கெடுக்கும் பணி முடிந்து அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 23,213 இரு சக்கர வாகனங்களும், 10,500 ஆட்டோக்களும், 1,623 கார்களும், 290 வணிக வாகனங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்களிடம் கையெழுத்து மற்றும் உரிய ஆவணங்களை பெற்று அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

முதல் கட்டமாக அடையாள அட்டை வழங்கும் பணி இன்று தொடங்கியது. ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் 24 அதிகாரிகள் தலைமையில் குழுவாக பிரிந்து வீடு வீடாக சென்று அடையாள அட்டைகளை வழங்கி வருகிறார்கள்.


அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு வீடாக சென்று வாகனங்கள் பற்றி கணக்கெடுக்கும் பணி நடந்தது. தற்போது இந்த பணிகள் முடிக்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் அடையாள அட்டை இல்லாத வெளி மாவட்ட வாகனங்களை பயன்படுத்தினால் அதற்கான செலவு வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

அடையாள அட்டைகளை வழங்க கணக்கெடுத்தபோது வெளியூர் சென்றிருந்தவர்கள் முறையான ஆவணங்களை கொடுத்து அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News