செய்திகள்

18 சதவீத ஜி.எஸ்.டி. வரியால் ‘ஹெல்மெட்’ விற்பனை பாதிப்பு

Published On 2017-11-14 04:59 GMT   |   Update On 2017-11-14 04:59 GMT
ஜி.எஸ்.டி. வரியில் ஹெல்மெட்டுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய தரமான ஹெல்மெட் வாங்குவோர் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சென்னை:

ஜி.எஸ்.டி. வரியில் ஹெல்மெட்டுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய தரமான ஹெல்மெட் வாங்குவோர் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியுடன் கூடுதல் விலை கொடுத்து ஹெல்மெட் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதன் காரணமாக தரமான ஹெல்மெட் விற்பனை குறைந்து வருகிறது. போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். எனவே வாகன ஓட்டிகள் கூடுதல் விலை கொடுத்து தரமான ‘ஹெல்மெட்’ வாங்குவதற்கு பதிலாக சாலையோரத்தில் விற்கப்படும் தரமற்ற போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட தலை கவசங்களை வாங்கும் நிலை ஏற்படுகிறது.



புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கும் போது ஹெல்மெட் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு அரசு வரி விதிப்பால் விலக்கு அளித்தது. உற்பத்தியாளர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட சலுகைகளை வாகனம் வாங்கும் போது வாகன ஓட்டிகளுக்கு நேரடியாக விற்பனையாளர்கள் வழங்கினார்கள்.

இதனால் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ. முத்திரையிடப் பட்ட ஹெல்மெட் வாகன ஓட்டிகளுக்கு ரூ.700-க்கு கிடைத்தது.

ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்ட பின்பு அரசு அளித்த தள்ளுபடியை விற்பனையாளர்கள் ரத்து செய்து கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்கிறார்கள். இதனால் சாலையோரத்தில் மலிவான விலையில் விற்கப்படும் ஹெல்மெட்டுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் போலியாக ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தியும் விற்பனை செய்கிறார்கள்.

சென்னை நகரில் பல இடங்களில் சாலையோரங்களில் வைத்து பகிரங்கமாக போலியான ஹெல்மெட்டுகள் விற்கப்படுகிறது. போக்குவரத்து போலீசார் இங்கு திடீர் சோதனை நடத்தி ஆய்வு செய்ய வேண்டும். சில கடைகளிலும் தரமான ஹெல்மெட் விற்கப்படுகிறதா? என சோதனை நடத்த வேண்டும்.

உயிர் காக்கும் தரமான ஹெல்மெட் விற்பனையை ஊக்கப்படுத்த அவற்றுக்கு அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பான ஹெல்மெட்டுகள் வாங்கும் நிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News