செய்திகள்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: தலைமை செயலாளர் ஐகோர்ட்டில் ஆஜர்

Published On 2017-11-07 11:03 GMT   |   Update On 2017-11-07 11:03 GMT
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட 4 அதிகாரிகள் நேரில் ஆஜரானார்கள்.
சென்னை:

சென்னை கோயம்பேட்டில் சோமு உட்பட 12 பேருக்கு சொந்தமான நிலங்களை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்தது.

ஆனால், எந்த காரணத்துக்காக நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டதோ, அதற்காக பயன்படுத்தப்படவில்லை என்றும் அந்த நிலங்களை தங்களிடம் திருப்பி ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடும்படியும் சோமு உட்பட 11 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த நிலங்களை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், இதுவரை நிலங்களை ஒப்படைக்காததால், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது மனுதாரர்கள் 11 பேரும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், வேல்முருகன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசு எப்படி காற்றில் பறக்க விடுகிறது என்பதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும், தமிழக அரசு இந்த ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தாமல் உள்ளது.

மேலும், இந்த வழக்கில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் முன்பு ஆஜராகி, பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை மனுதாரர்களுக்கு ஒப்படைத்து விடுகிறோம் என்றார். இப்போது அதற்கு நேர்மாறாக, மனுதாரர்களிடம் இருந்து ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்கள் எல்லாம் பயன்படுத்தப்பட்டு விட்டது. அதனால், நிலங்களை திருப்பிக் கொடுக்க முடியாது என்கிறார்.

எனவே, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை முன்னாள் செயலாளர் தர்மேந்திரபிரதாப் யாதவ், தற்போதைய முதன்மை செயலாளர் கிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் விஜய ராஜ்குமார் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.

இதன்படி இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உட்பட 4 அதிகாரிகள் நேரில் ஆஜரானார்கள்.

அவர்களிடம் நீதிபதிகள், 2013-ம் ஆண்டு பிறப்பித்த இந்த உத்தரவை இதுவரை அரசு அமல்படுத்தாமல் உள்ளது. இதுபோல பல உத்தரவுகளை அரசு அமல்படுத்தாமல் உள்ளது. இதனால் தேவையில்லாமல் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்யப்படுகின்றன.

அந்த வழக்கை தொடர்பவர்களும் வெளியூர்களில் இருந்து இந்த கோர்ட்டுக்கு வந்து செல்ல வேண்டியதுள்ளது. இதுமட்டுமல்ல ஒரு வழக்கில் பிறப்பிக்கப்படும் தீர்ப்பை அமல்படுத்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யவேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை நீங்கள் (அதிகாரிகள்) தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நேரில் ஆஜராக உத்தரவிட்டோம் என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர் மனுதாரர்களின் கோரிக்கை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அதிகாரிகள், மனுதாரர்களுக்கு மாற்று இடம் தருவதாக கூறினார்கள். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இதுகுறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைத்தனர்.
Tags:    

Similar News