செய்திகள்

லைசென்சை புதுப்பிக்காமல் பஸ்களை ஓட்டும் 30 டிரைவர்கள்: ஐகோர்ட்டு நோட்டீஸ்

Published On 2017-10-17 05:47 GMT   |   Update On 2017-10-17 05:47 GMT
விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் லைசென்ஸ் புதுப்பிக்காமல் பஸ்கள் ஓட்டும் 30 டிரைவர்கள் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு நீதிபதி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
சென்னை:

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக வேலை செய்பவர் அன்புச்செல்வம். இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம், அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்பவர் நடராஜன். இவர், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தின் மண்டல செயலாளராக உள்ளார்.

இவரது ஓட்டுனர் உரிமம் கடந்த 2011-ம் ஆண்டு காலாவதியாகி விட்டது. அதன்பிறகு அவரது ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாமல், அவர் கடந்த 6 ஆண்டுகளுக்காக டிரைவராக வேலை செய்கிறார். இது சட்டவிரோதம் மட்டுமல்ல, அவர் இயக்கும் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பேராபத்தை விளைவிக்கும் செயலாகும்.

நடராஜனின் ஓட்டுனர் உரிமத்தை தானாக புதுப்பிக்க முடியாது. அவர் 40 வயதை கடந்தவர் என்பதால், முறையான மருத்துவ சோதனைக்கு உள்ளாகி, முறையான மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்பித்தால் உரிமம் புதுப்பிக்கப்படும்.

இவரை போல 31 டிரைவர், கண்டக்டர்கள் தங்களது உரிமத்தை புதுப்பிக்காமல், பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து விழுப்புரம் மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, முறையான உரிமம் இல்லாமல், அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு வருகிற 26-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும் படி விழுப்புரம் போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
Tags:    

Similar News