செய்திகள்

பல்லடம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மீது கல் வீசி தாக்குதல்: வாலிபர் கைது

Published On 2017-09-21 11:59 GMT   |   Update On 2017-09-21 11:59 GMT
பல்லடம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் கார்த்திகேயன். அதே போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்ப்பவர் ஜெகதீசன்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றனர். பல்லடம்- நல்லூர்பாளையம் ரோட்டில் பவர்ஹவுஸ் அருகே சென்ற போது அங்கு சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர்.

அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கு இருந்து தப்பி ஓடினர். இதனை பார்த்த போலீசார் அவர்களை விரட்டி சென்று ஒருவனை மடிக்கி பிடித்தனர்.

பின்னர் மற்றொருவனை பிடிக்க விரட்டி சென்றனர். அப்போது தப்பி ஓடிய அந்த வாலிபர் தனது கூட்டாளியை போலீசிடம் இருந்து காப்பாற்றுவதற்காக போலீசார் மீது கல் வீசி தாக்கினான். இதில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கை மற்றும் பிடிபட்ட வாலிபரின் தலையில் காயம் ஏற்பட்டது.

பின்னர் அங்கு வந்த சக போலீசார் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வாலிபரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் பிடிபட்ட வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ஈஷாகுமார் (வயது 25), சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு ஓடிய வாலிபர் புளியங்குடியை சேர்ந்த வின்சென்ட் என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து 2 பேரும் திருடுவதற்காக நின்றார்களா? எதற்காக போலீசை பார்த்ததும் தப்பி ஓடினார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News