செய்திகள்

பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார்: நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிடுவாரா?

Published On 2017-09-19 09:48 GMT   |   Update On 2017-09-19 09:48 GMT
சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ள பரபரப்பான சூழ்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார்.

தற்போதுள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் சென்னை வருவதாக இருந்தது. ஆனால் நேற்று சென்னை வரவில்லை.

இன்று காலை அவர் மீண்டும் டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியலில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவருடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார்.



அதன் பின்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை புறப்பட்டார். இன்று பிற்பகல் சரியாக 3.00 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். கவர்னர் மாளிகையில் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர், முதல்வர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

இதுவரை உட்கட்சி சண்டையில் தலையிட முடியாது என்று கூறிவந்த ஆளுநர், தற்போது சபாநாயகர் 18 பேரை தகுதி நீக்கம் செய்துள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் நாளை வரை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கூடாது என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் தகுதி நீக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Tags:    

Similar News