செய்திகள்

மேலூரில் திரண்ட மக்களை பார்த்தாவது அமைச்சர்கள் திருந்த வேண்டும்: தினகரன்

Published On 2017-08-15 06:29 GMT   |   Update On 2017-08-15 06:29 GMT
மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரண்ட மக்களை பார்த்த பிறகாவது தமிழக அமைச்சர்கள் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
மதுரை:

அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று மேலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டது தினகரன் ஆதரவாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் டி.டி.வி. தினகரன் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அம்மன் சன்னதி, சாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்த தினகரனுடன் அவரது ஆதரவாளர்களும் அதிக அளவில் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-


மேலூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடக்கம்தான். இந்த கூட்டத்தில் இருந்த தொண்டர்களின் எழுச்சியை பார்த்தாவது அமைச்சர்கள் திருந்த வேண்டும். எது சரி என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக்கொள்வார்கள். இல்லாவிட்டால் திருத்தப்படுவார்கள். கட்சியை பலப்படுத்தும் நோக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறோம். எனது பயணம் தொடரும். வருகிற 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்யும் வரை ஓய்வு, உறக்கம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினகரனுடன் முன்னாள் எம்.எல்.ஏ. சாமி, மத்திய 1-ம் பகுதி செயலாளர் ஜெயபால், எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் பால சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

தினகரன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சாமி கும்பிட சென்ற நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான மாணிக்கம் தனது குடும்பத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார்.

தினகரன் சாமி கும்பிடும் நேரத்தில் மாணிக்கம் எம்.எல்.ஏ.வும் சாமி தரிசனம் செய்ய சென்றதால் இருவரும் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை.
Tags:    

Similar News