செய்திகள்

ஓமலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 வயது பெண் குழந்தை பலி

Published On 2017-07-20 13:54 GMT   |   Update On 2017-07-20 13:54 GMT
ஓமலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 வயது பெண் குழந்தை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஊ.மாரமங்கலம் ஊராட்சி கருப்பணம்பட்டி கிராமம் ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்தவர் அம்சராஜ். கூலி தொழிலாளியான இவருக்கு அம்பிகா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஸ்ரீவர்சினி என்ற 4 வயது பெண்குழந்தை இருந்தது. தற்போது அம்பிகா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் சிறுமி ஸ்ரீ வர்சினிக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றனர். அங்கு காய்ச்சல் குறையாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து அவர்கள் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்ற குழந்தை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்து ஒரு மணி நேரத்தில் குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் பலியானது.

இது குறித்து அவரது உறவினர்கள் கூறும் போது நன்கு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. காப்பாற்றுவதற்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கும் முடியாது என கூறியதால் ஓமலூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த பின்பு இறந்து விட்டது.

மர்மமாக உள்ள இந்த காய்ச்சல் என்ன என்று இது வரை எந்த மருத்துவரும் தெரிவிக்கவில்லை. இந்த கிராமத்தில் மேலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News