செய்திகள்

தனியார் பால்களில் வி‌ஷத்தன்மை இல்லை: புனே பரிசோதனை கூடம் தகவல்

Published On 2017-06-23 07:58 GMT   |   Update On 2017-06-23 07:58 GMT
தமிழகத்தில் விற்கப்படும் தனியார் பால்களில் வி‌ஷத்தன்மை கொண்ட ரசாயனங்கள் எதுவும் கலக்கப்படவில்லை என்று புனே பரிசோதனை கூட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை:

தமிழ்நாட்டில் விற்கப்படும் தனியார் பால்களில் வி‌ஷத்தன்மை கொண்ட ரசாயனங்கள் கலக்கப்படுவதாகவும் இதனால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் கூறினார்.



இதற்கு தனியார் பால் நிறுவனங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தனியார் பால்களில் வி‌ஷத்தன்மை இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய பல மாதிரிகள் புனாவில் உள்ள தேசிய உணவு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவற்றை பரிசோதனை செய்து அதன் முடிவுகளை தமிழக பால்வளத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது சம்பந்தமாக புனே ஆய்வு கூட அதிகாரிகள் கூறும் போது, தமிழகத்தில் இருந்து வந்த பால் மாதிரிகளை ஆய்வு செய்து அதன் முடிவுகளை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து விட்டோம். அதில் என்ன விவரங்கள் இருக்கிறது என்பது பற்றிய தகவல்களை நாங்கள் வெளியிட முடியாது என்று கூறினார்கள்.

இது தொடர்பாக தமிழக பால்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, புனாவில் இருந்து அறிக்கை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறினார்கள்.

ஆனால், தனது பெயரை சொல்ல விரும்பாத வேறு ஒரு அதிகாரி கூறும் போது, புனாவில் இருந்து வந்த அறிக்கை கிடைத்துள்ளது. அந்த அறிக்கையில் தனியார் பால்களில் வி‌ஷத்தன்மை கொண்ட ரசாயனங்கள் எதுவும் கலக்கப்படவில்லை. அதாவது கலப்படம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News