செய்திகள்

குளிர் சாதன வசதி இல்லாததால் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரியில் ஆபரே‌ஷன்கள் நிறுத்தம்

Published On 2017-04-28 06:48 GMT   |   Update On 2017-04-28 06:57 GMT
சென்னை ஓமந்தூரர் தோட்டத்தில் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்குகளிலும் ஏ.சி. செயல்படாததால் ஆபரே‌ஷன் தள்ளி வைக்கப்பட்டது.
சென்னை:

சென்னை ஓமந்தூரர் தோட்டத்தில் அரசு பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

சிறப்பு வாய்ந்த நிபுணர்கள், சென்னை அரசு ஆஸ்பத்திரியில் இல்லாத நவீன சிகிச்சைகள் இங்கு உள்ளது.

இந்த மருத்துவமனை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டதாகும். புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகள், ஆபரே‌ஷன் தியேட்டர்கள், மருந்தகம், பரிசோதனை கூடங்கள், கேண்டீன், ஆலோசனை கூட்டரங்கு உள்ளிட்ட அனைத்தும் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

குளிரூட்டக்கூடிய எந்திரம் கடந்த சில நாட்களாக செயல்படாததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். கூலிங் பாயிண்ட்டில் பழுது ஏற்பட்டதால் ஆஸ்பத்திரி முழுவதும் குளிர் சாதன வசதி தடைப்பட்டது.

மருத்துவமனைக்குள் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்த மருத்துவமனை முழுவதும் ஜன்னல் எதையும் திறக்கப்படாமல் மூடப்பட்டிருக்கும்.

இதனால் வெளியில் இருந்து இயற்கையான காற்றை சுவாசிக்க இயலாது.

ஏ.சி.யும் இல்லாமல் வெளிக்காற்று உள்ளே வர முடியாததால் நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் வெப்பத்தால் அவதிப்பட்டனர்.

பல் நோக்கு மருத்துவமனையில் இருதயம், கை மறுசீரமைப்பு, எலும்பு முறிவு, நரம்பியல் போன்ற சிறப்பு துறைகளில் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

அறுவை சிகிச்சை அரங்குகளிலும் ஏ.சி. செயல்படாததால் ஆபரே‌ஷன் தள்ளி வைக்கப்பட்டது. மிகவும் சிக்கலான, ஆபரே‌ஷன்கள் இங்கு நடைபெறுவது வழக்கம். ஏ.சி. எந்திரம் பழுது காரணமாக கடந்த 3 நாட்களாக அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏ.சி. பிளாண்ட் பழுதானதை உடனடியாக பார்க்க வரவில்லை.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் காலதாமதமாக வந்து பழுதை கண்டு பிடித்தனர். நோயாளிகள் சிகிச்சை அளிக்கவும், அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பழுதை சரி பார்க்க தாமதம் ஆனதால் 150 மின் விசிறிகள் வாங்கப்பட்டு வார்டு மற்றும் சிகிச்சை அறைகளில் பொருத்தப்பட்டன. ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள சென்னையைச் சேர்ந்த நோயாளிகள் தங்கள் வீடுகளில் இருந்து மின் விசிறியை கொண்டு வந்து பயன்படுத்தினர்.

Tags:    

Similar News