செய்திகள்

2 சிறுவர்களுக்கு தாயின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது: காவேரி மருத்துவமனை சாதனை

Published On 2017-04-27 09:51 GMT   |   Update On 2017-04-27 09:51 GMT
காவேரி மருத்துவமனையில் இரண்டு சிறுவர்களுக்கு தாயின் சிறுநீரகத்தை வெற்றிகரமாக பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
சென்னை:

சென்னையை சேர்ந்த சிறுவர்கள் அருண் குமரன் (வயது 11), மிதுன் (9). வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த இந்த சிறுவர்களுக்கு பிறவியிலேயே சிறுநீரகம் வளர்ச்சி அடையாமல் இருந்தது.

இதனால் உயர் ரத்தழுத்தம் காணப்பட்டது. மருந்துகள் மூலமே சிறுநீரக பிரச்சினையை சமாளித்து வந்தனர். குழந்தைகள் வளர வளர மருந்துகள் மூலம் கையாள்வதில் சிரமம் ஏற்பட்டது.

ஆரோக்கியமாக நீண்ட கால வாழ்க்கைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் தான் நல்லது என்று டாக்டர்கள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினர். சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மற்றவர்களின் சிறுநீரகம் தேவை. அரசு ஆஸ்பத்திரிகளிலோ, தனியார் மருத்துவமனைகளிலோ சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைக்காக பலர் காத்து இருக்கின்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் குழந்தைகளுக்கு பெற்றோர்களே தங்கள் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தனர்.

ஆனால் பெற்றோர்களின் சிறுநீரகத்தை குழந்தைகளுக்கு பொறுத்த மருத்துவரீதியாக சில அம்சங்கள் ஒத்து போக வேண்டும். இந்த 2 சிறுவர்களுக்கும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அவர்களின் தாய் மார்கள் சிறுநீரகம் தருவதற்கு முன்வந்தனர்.

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் டாக்டர்களின் ஆலோசனை பெற்று சிறுநீரக மாற்று அறுவை சிக்ச்சை செய்ய 2 சிறுவர்களின் பெற்றோர்களும் சம்மதித்தனர். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் சிறுவர்களுக்கு தங்கள் தாயிடம் இருந்து சிறுநீரகத்தை அகற்றி வெற்றிகரமாக டாக்டர்கள் அறுவை சிசிக்சை செய்தனர்.

இது குறித்து மருத்துவமனையின் தலைமை சிறு நீரகவியல் நிபுணர் பாலசுப்பிரமணியிடம் கேட்ட போது,

இந்த குழந்தைகளுக்கு பிறவியிலேயே சிறுநீரக பிரச்சினை இருந்ததால் அதற்கு நிரந்தர தீர்வு காண சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்பட்டது. இரு குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மார்களே சிறுநீரகத்தை தானம் செய்தனர்.

இதையடுத்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்றார்.

முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிசிச்சை செய்யப்பட்டுள்ளது.

Similar News