செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

Published On 2017-04-26 16:01 GMT   |   Update On 2017-04-26 16:02 GMT
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கிய அரசு ஊழியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
சென்னை:

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கியது.

இந்த வேலை நிறுத்தத்திற்கு வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, அங்கன்வாடி பணியாளர் சங்கம் உள்ளிட்ட 61 சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. கருவூலங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஊழியர்கள் பணிக்கு வராததால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் உதயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஜூலை மாத இறுதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். அவரது வாக்குறுதியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Similar News