செய்திகள்

சூறைக்காற்றுடன் மழை: 8 மின்கம்பம், மரங்கள் சாய்ந்தன

Published On 2017-04-24 17:15 GMT   |   Update On 2017-04-24 17:15 GMT
சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு மோகனூர் பகுதியில் 8 மின்கம்பங்களும், 6 மரங்களும் சாய்ந்து விழுந்தன.
மோகனூர்:

நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு குமாரபாளையம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், எருமப்பட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக குமாரபாளையத்தில் 27 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- குமாரபாளையம்-27, எருமப்பட்டி-7, சேந்தமங்கலம்-6, திருச்செங்கோடு-4, மங்களபுரம்-2. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 46 மி.மீட்டர் ஆகும்.

நேற்று மோகனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மோகனூரில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் வள்ளியம்மன் கோவில் அருகே இருந்த புளியமரம் ஒன்று ரோட்டில் சாய்ந்ததால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மரம் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.

அதேபோல் மோகனூர் பேரூராட்சி பகுதியில் கால்நடை மருத்துவமனை செல்லும் வழியில் ஒரு வேப்பமரம், ஒரு புங்கமரம் முறிந்து விழுந்தது. மோகனூர் பேரூராட்சி 15-வது வார்டு மஜீத் பின்புறம் பலத்த காற்று வீசியதில் ஒரு மரம் முறிந்து விழுந்து வீட்டின் மேற்கூரை சேதமானது. வளையப்பட்டியில் இருந்து காட்டுப்புதூர் செல்லும் சாலையில் அரூர் நத்தமேடு அருகே 2 புளியமரங்கள் சாய்ந்து விழுந்தது. மோகனூர் பகுதியில் மொத்தம் 6 மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதேபோல் சூறாவளி காற்றால் 6-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஓடுகள், கூரைகள் சேதம் அடைந்தன.

இதேபோல் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மோகனூர் மற்றும் மணியங்காளிப்பட்டி பகுதியில் 8 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் அந்த பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

Similar News