செய்திகள்

கூடலூர் பகுதியில் மதுபானம் விற்கும் பள்ளி மாணவர்கள்

Published On 2017-04-24 12:13 GMT   |   Update On 2017-04-24 12:13 GMT
கூடலூர் பகுதியில் டாஸ்மாக் கடைகள் அடைப்பால் மதுபானங்கள் விற்று மாணவர்கள் வருமானம் பார்த்து வருகின்றனர்.
கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூரில் மெயின் பஜார், காமாட்சியம்மன் கோவில் தெரு ஆகிய 2 இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி கடந்த 1-ந் தேதி முதல் இந்த 2 கடைகளும் அடைக்கப்பட்டன.

அதன்பிறகு வேறு இடத்தில் கடைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. மயான சாலையில் கடை அமைக்க இடம் தேர்வு செய்ய அதிகாரிகள் சென்றபோது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இதனால் கடந்த 24 நாட்களாக குடிகன்கள் 10 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள கம்பம் மற்றும் சுருளிபட்டிக்கு சென்று மதுபானங்கள் வாங்கி குடித்து வருகின்றனர். டாஸ்மாக் கடை இல்லாததை பயன்படுத்தி சிலர் வெளியிடங்களில் மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.50 வைத்து விற்பனை செய்கின்றனர். 10 பாட்டில்கள் விற்றால் ரூ500 வருமானம் கிடைப்பதால் தினசரி மதுபானம் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நண்பர்களுக்குள் பரஸ்பரம் பேசி மோட்டார் சைக்கிளில் மொத்தமாக ஸ்கூல் பேக்குகளில் மது பாட்டில்களை வைத்து கன்னிகாளிபுரம், 18-ம் கால்வாய் பகுதி, காமாட்சியம்மன் கோவில் தெரு, மெயின்பஜார், சவுடம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். குடிமகன்களும் அலைந்து சென்று மதுபானம் வாங்குவதை விட கூடுதல் விலைக்கு அருகிலேயே கிடைப்பதால் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர்.

கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டிய மாணவர்கள் மதுபானம் விற்று வருமானம் ஈட்டிவருவதை போலீசார் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News