செய்திகள்

டிடிவி. தினகரனை டெல்லி போலீஸ் கைது செய்ததா?: எழும்பூர் கோர்ட்டில் நீதிபதி கேள்வி

Published On 2017-04-24 10:24 GMT   |   Update On 2017-04-24 10:24 GMT
டிடிவி. தினகரனை டெல்லி போலீசார் கைது செய்துவிட்டனரா? என்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
சென்னை:

சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில், டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரனின் வக்கீல் ஆஜராகி, ‘டெல்லி போலீசார் பதிவு செய்த ஒரு கிரிமினல் வழக்கின் விசாரணைக்காக டி.டி.வி. தினகரன் டெல்லி சென்றுள்ளார். எனவே, இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கூறினார்.

அதற்கு நீதிபதி, ‘அந்த வழக்கில் டி.வி.வி. தினகரனை டெல்லி போலீசார் கைது செய்து விட்டனரா?’ என்று கேட்டார். ‘கைது எதுவும் செய்யப்படவில்லை. அந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தினகரனிடம் விசாரித்துக் கொண்டு இருக்கின்றனர்’ என்று வக்கீல் பதிலளித்தார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, ‘ஒருவேளை தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டால், அந்த தகவலை உடனடியாக தெரிவிக்க வேண்டும்’ என்று கூறினார்.

பின்னர், இந்த வழக்கு விசாரணையை வருகிற 27ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று டி.டி.வி. தினகரன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News