செய்திகள்

முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க. பங்கேற்காது: டாக்டர் ராமதாஸ் அறிக்கை

Published On 2017-04-23 06:10 GMT   |   Update On 2017-04-23 06:10 GMT
முழு அடைப்பு போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், பாட்டாளி தொழிற்சங்கமும் பங்கேற்காது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட உழவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுப்பதைக் கண்டித்து தமிழ் நாட்டில் நாளை மறுநாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இம் முடிவு நேற்று நடந்த கலந்தாய்வுக் கூட்டத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது அரசியல் அடையாளம் தேடும் நடவடிக்கையே தவிர உழவர்களை காப்பதற்கான முயற்சி அல்ல என்பதே பா.ம.க.வின் கருத்து.

எந்த அடிப்படையில் உழவர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், முழு அடைப்புப் போராட்டத்தையும் திமுக நடத்துகிறது என்பது தான் புரியவில்லை. காவிரிப் பிரச்சினைக்கு காரணமே தி.மு.க. தான்.


தி.மு.க.வுக்கு உழவர்களின் நலனுக்காக போராடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? ஒருவேளை கடந்த காலங்களில் உழவர்களுக்கு இழைத்த துரோகங்களுக்கு பரிகாரம் தேடுவதற்காகத்தான் அவர்களுக்கு ஆதரவாக போராட தி.மு.க. முன்வந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அதற்காக திமுக தேர்ந்தெடுத்துள்ள போராட்ட வடிவம் பயனளிப்பதை விட பாதிப்பையே ஏற்படுத்தும்.

ஒருநாள் முழுவதும் கடைகளை அடைத்தும், போக்குவரத்தை தடை செய்தும் போராட்டம் நடத்தும் போது அதனால் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்பது ஒருபுற மிருக்க, அனைத்துத் தரப்பு மக்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

அதுமட்டுமின்றி, முழு அடைப்புப் போராட்டங்களை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அதை மீறி போராட்டம் நடத்தினால், அதன்பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீதிமன்றத்திடம் கோர முடியும். உழவர்களின் பெயரால் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள் உழவர்களைத் தான் தூற்றுவர் என்பதால் அவர்கள் தரப்பு நியாயம் அடிபட்டுவிடும்.

உழவர்களின் கோரிக்கைக்கான அனைத்து அறவழிப் போராட்டங்களையும் பா.ம.க. ஆதரிக்கிறது. மாறாக பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயனற்ற போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது, அரசியல் அணி திரட்டும் முயற்சியே தவிர, உழவர்களின் நலன் சார்ந்தது அல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது.

எனவே, இந்த போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், பாட்டாளி தொழிற்சங்கமும் பங்கேற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, இத்தகைய போராட்டங்களைத் தவிர்த்து மக்களுக்கு பாதிப்பற்ற வகையிலான போராட்ட வடிவத்தை கையில் எடுக்கும்படி அனைத்து கட்சிகளையும் பாட்டாளி மக்கள் கட்சி நட்புடன் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News