செய்திகள்

துணைவேந்தரை நியமிக்காமல் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்த கூடாது: ராமதாஸ்

Published On 2017-04-23 03:50 GMT   |   Update On 2017-04-23 03:50 GMT
துணைவேந்தரை நியமிக்காமல் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்த கூடாது என்று பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி சுமார் ஓராண்டாக காலியாக உள்ள நிலையில் துணைவேந்தர் இல்லாமலேயே பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தமுடிவு கண்டிக்கத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு படிப்பை முடித்தவர்களுக்கு ஓராண்டு ஆகியும் பட்டங்களை வழங்காததால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை விட, துணைவேந்தரின் கையெழுத்து இல்லாமல் பட்டங்களை வழங்குவது மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பட்டம் செல்லத்தக்கது என்பதற்கான அடையாளமே துணைவேந்தரின் கையொப்பம் தான். துணைவேந்தருக்கு பதில் உயர்கல்வித்துறை செயலர் கையெழுத்திட்டோ பட்டங்கள் வழங்கப்பட்டால் அவை அவற்றுக்குரிய மரியாதையை இழந்து விடும் ஆபத்து உள்ளது என்பதை பல்கலைக்கழக நிர்வாகம் உணர வேண்டும்.



உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆட்சியாளர்கள் கூறிக் கொள்ளும் நிலையில் துணைவேந்தர்களை நியமிப்பதில் இவ்வளவு கால தாமதம் ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பணி இடங்கள் நீண்டகாலமாக காலியாக உள்ள நிலையில் உடனடியாக அவற்றை நிரப்பி பட்டமளிப்பு விழாக்களை நடத்த அரசு முன் வர வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Similar News