செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் கோஷ்டி மோதல்

Published On 2017-04-22 09:58 GMT   |   Update On 2017-04-22 09:58 GMT
ஆண்டிப்பட்டி அருகே விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில் பட்டியைச் சேர்ந்தவர் தங்கமணி (வயது 40). திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (42). விவசாயிகளான இவர்களுக்கு வைகை ஆற்றங்கரையில் விளை நிலம் உள்ளது. இவர்கள் வைகை ஆற்றில் ஊற்று தோண்டி விவசாயம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக நேற்று 2 பேருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வேல் முருகன் அரிவாளால் தங்கமணியை வெட்டினார். தங்கமணி அலறி துடித்தவாறு கீழே விழுந்தார்.

இதனை அறிந்த தங்கமணியின் உறவினர்கள் பாலமுருகன், போஸ், ஜெகதீபன், ஆகியோர் விரைந்து வந்தனர். இதனால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வேல் முருகன் தாக்கப்பட்டார்.

அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த தங்கமணி உடனடியாக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து க.விலக்கு போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக வேல்முருகன், போஸ் ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News