செய்திகள்

தமிழகத்தில் 1,500 மதுக்கடைகளை மீண்டும் திறக்க முயற்சி

Published On 2017-04-22 03:12 GMT   |   Update On 2017-04-22 03:12 GMT
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றி, தமிழகத்தில் 1,500 மதுக்கடைகளை மீண்டும் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான அரசு அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
சென்னை:

தமிழ்நாட்டில் 6,672 டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்தன. அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, 2 கட்டங்களாக 1,000 மதுக்கடைகளை அடைத்தது. அதன்பின்னர், 5,672 மதுக்கடைகள் தமிழகத்தில் இயங்கி வந்தன.

இந்தநிலையில், நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.



அதன்படி, தமிழகத்தில் 3,321 மதுக்கடைகளை அடைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், இந்த உத்தரவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டதால், தமிழகத்தில் சுமார் 300 மதுக்கடைகள் மூடப்படும் நிலையில் இருந்து தப்பித்தது. தற்போது, தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரம் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகளையும், சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள எல்லையைத் தாண்டி திறக்கும் முனைப்பில் தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் அருகே டாஸ்மாக் கடைகளை திறக்க முயன்றதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

3 ஆயிரம் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், விற்பனை 21 சதவீதம் குறைந்துள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் இருக்கும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை, மாநகராட்சி சாலைகள் என்றும், நகராட்சி சாலைகள் என்றும் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

அவ்வாறு, அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் மதுக்கடைகளில், 1,500 மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது. இது மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் மத்தியில் இதற்கு இப்போதே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Similar News